அறம் செய்ய மட்டுமல்ல, இல்லறம் செய்யவும் விரும்ப வேண்டும். வீட்டுக்கு வீடு வாசற்படி போல, முரண்களும் நிறைந்தது தான் உலகு. இதில், விட்டுக் கொடுப்பவர் வரலாற்றில் மேன்மையுறுவர் தானே.! ஆம்.. வாழ்வோம், வாழ வைப்போம்; இப்ப விஷயத்திற்கு வருவோம்..

தமிழ்த்திரை உலகில், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘ துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், மிக குறுகிய காலத்தில் படிப்படியாக முன்னேறி இளம் ஹீரோ என்ற இமேஜை பெற்றார் என்பது தெரிந்ததே.

பின்னர், 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய பன்முகத் திறமையை திரையுலகில் காட்டிய தனுஷ், தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா – லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து செல்ல உள்ளதாக அறிவித்தனர்.

தனுஷ்-ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க, ஒரு வருடத்திற்கு மேலாக இரு வீட்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே தங்களுடைய முடிவில் தீர்மானமாக இருந்தனர். மேலும் இவர்களுடைய குழந்தைகளும் இவர்களின் முடிவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து, அம்மா – அப்பா என இருவரிடமும் மாறி மாறி வசித்து வருகின்றனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா வாழ்க்கையில் விவாகரத்து பெற்று பிரியும் முடிவை எடுத்ததற்கான காரணங்கள் யூகத்தின் அடிப்படையில், சமூக வலைதளத்தில் பல செய்திகள் வெளியானாலும், இதுவரை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணத்தை ஒரு முறை கூட கூறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு விவாகரத்து கூறி ஐஸ்வர்யா-தனுஷ் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், இந்த வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இருவருக்குமே விவாகரத்தில் உடன்பாடு இல்லையா? என சில பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், அக்டோபர் 19-ம் தேதி என்ன நடக்கும்? என நல்லெண்ணம் கொண்ட திரை ஆர்வலர்களும் ரசிகர்களும், ‘ விரைவில், நல்லவை நடக்கட்டுமே..’ என எதிர்பார்க்கிறார்கள்.

திருமணம் என்பதும் நறுமணம் – இதில், இருமனம் ஒருமனம் ஆகட்டும்.!