விஜய் சேதுபதி – திரிஷா ஜோடியுடன் ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், “ஆடுகளம்” முருகதாஸ்… உள்ளிட்டோர் நடிக்க, C.பிரேம்குமார் இயக்கத்தில், எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், “7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் “லலித் குமார் வெளியீடு செய்ய, காமம் கொஞ்சமும் இல்லாத காதல் படமாக வந்திருக்கிறது “96”.

கதைப்படி, சென்னையில் பிரபல புகைப்படக் கலைஞராகவும், பகுதி நேர புகைப்படக் கலை டியூட்டராகவும் இருக்கும் ராமு எனும் K.ராமசந்திரன், தன் போட்டோகிராபி ஜுனியர்களுடன் தஞ்சை பகுதிக்கு செல்லும் போது, அங்கு தான் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடத்திற்கு போகிறார். சக மாணவியும், தன் வகுப்பிலேயே நல்ல குரல் வளம் உடைய பாடகியுமான ஜானுவுடனான தன் காதலும் ராமுவுக்கு ஞாபகம் வர, ஜானுவுடன் 1996-ல் தன்னுடன் படித்த வகுப்பு தோழர்களை சந்திக்க விரும்பும் ராம், தன்னுடன் தற்போதும் டச்’சில் இருக்கும் நண்பர்கள் முரளி, சதீஷ் மற்றும் சுபா வாயிலாக ’96 பேட்ச் மாணவர்களை சென்னையில் சந்திக்க, “வாட்ஸ் – அப்” வலைதள வசதி மூலம் ஏற்பாடு செய்ய சொல்கிறார்.

அதனால் உடனடியாக, ஏற்பாடு செய்யப்படும் ’96 பேட்ச் மீட் பார்ட்டிக்கு ராமின் பத்தாங் கிளாஸ் காதலி ஜானு ‘அலைஸ்’ ஜானகி வந்தாரா? 22 வருடங் கழித்து, ராமுவும் ஜானுவும் சந்தித்தனரா..? அதன் பின் என்னென்ன நடந்தது? ராமு திருமணம் செய்து கொள்ளாத காரணம் என்ன..? ராமு – ஜானு காதல் கைகூடாமல் போகக் காரணம் என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட விடையளிக்கிறது’ 96 படத்தின் மீதிக் கதை மொத்தமும்!

ராமு எனும், K.ராமசந்திரனாக சென்னையில் வசிக்கும் டிராவல் புகைப்படக் கலைஞராக விஜய் சேதுபதி, வழக்கம் போலவே மிரட்டலாக நடித்திருக்கிறார். தஞ்சையில் தான் படித்த ஸ்கூலில் போய் சப்தமில்லாது மணி அடித்து பார்ப்பதும், பசங்களால் பாசமாக காவல் தெய்வம் என அழைக்கப்படும் ஸ்கூல் வாட்ச்மேன் ஜனகராஜ் மீது கார் ஏற்றுவது போல் பாவ்லா காட்டுவதுமாக குழந்தை தனமாக இருக்கும் விஜய் சேதுபதிக்குள் உறங்கிக் கிடக்கும் பத்தாங் கிளாஸ் காதல், ஜானு – திரிஷா வந்ததும் பற்றிக் கொள்ளும் இடங்களில் மனிதர், நடிப்பில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.

ஜானுவின் பாட்டுக்காகத் தான், நான் ஸ்கூல் டேஸில் 90% அட்டென்டன்ஸ் எடுத்ததற்கு காரணம்… என உண்மையைபோட்டு உடைக்கும் இடங்களிலும், முன்னால் காதலியை வலது கால் எடுத்து வைத்து தன் ப்ளாட்டுக்குள் கூப்பிடும் இடங்களிலும்… மனிதர், ஒவ்வொரு ரசிகனையும் பிரதிபலிப்பதும் ரசனையோ ரசனை!

கதாநாயகி ஜானு எனும் ஜானகியாக த்ரிஷா, செம்ம பிரஷ்ஷாக இருக்கிறார். சிங்கப்பூர் ரிட்டர்னாக ஒரு குழந்தைக்கு தாயாக சிங்கப்பூர் கணவருடன் “சந்தோஷமா இருக்கியா ன்னா நிம்மதியா இருக்கேன்னு சொல்லலம்…” எனும் ஒற்றை வரி பதிலில் தன் சிங்கப்பூர் வாழ்க்கையை, சொல்லும் விதத்தில் தொடங்கி, விஜய் சேதுபதி வீட்டில் அவர் எதிர்பாராத தருணத்தில் அவர் விரும்பி பத்தாங் கிளாஸில் இருந்து கேட்டு வரும்,” யமுனை ஆற்றிலே…” கரண்ட் போன போது பாடிடும் இடங்களிலும் அம்மணி களேபரம்!

அதே நேரம், ’96 பேட்ச் மீட் பார்ட்டிக்கு, சிங்கப்பூரில் இருந்து த்ரிஷா சற்று தாமதமாக வந்ததும், சேதுபதியை தேடாமல்… சும்மா இருப்பது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆனாலும், முன்னால் காதலரின் சர்ட்டை மோந்து வாசம் பிடித்துப்பார்க்கும் இடம் மற்றும், ராம் நீ இப்படி எல்லாம் கல்யாணம் செய்யாமல் காலம் பூரா இருக்கக் கூடாது… நீ மேரேஜ் செய்துட்டு குழந்தைகள் பெத்துக்கணும். நான், உன் குழந்தைகளை தூக்கி கொஞ்சனும் அதுகளோட கண்ணுல, முக்குல உன் சாயல்… பார்த்து நான் சிலிர்க்கணும்… எனும் த்ரிஷாவும் அவரது நடிப்பும் செம்ம ப்ரஷ்ஷாக, ரசிகனுக்கு மெய் சிலிர்ப்பாக இருப்பது இப்படத்திற்கு பெரும் பலம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜனகராஜ், தஞ்சை பள்ளி வாட்ச்மேனா, காவல் தெய்வமாக வந்து போகிறார் அவ்வளவே…. என்பது ஏமாற்றம்! சேது, த்ரிஷாவின் வகுப்புத்தோழி சுபாவாக தேவதர்ஷினி, முரளி – பகவதி பெருமாள், சதீஷ் – “ஆடுகளம்” முருகதாஸ், சின்ன வயது ராம், ஜானு, சுபா, முரளி, சதீஷ்… ஆகிய அனைவரும் கச்சிதம்.

வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் ’96 பேட்ச் மீட் நடைபெறும் லொகேஷன் உள்ளிட்டவை அசத்தல். கோவிந்தராஜின் படத்தொகுப்பில், பெரிய பாதகம் ஏதுமில்லை. சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ஒளி ஒவியம். குறிப்பாக ஏர்போர்ட் ஷாட் மற்றும் இரவு நேர சென்னை உள்ளிட்டவை வாவ்…. என வாய் பிளக்க வைக்கின்றன.

கோவிந்த் வஸந்தா இசையில், “தி லைப் ஆப் ராம்…”, “ஏன்…”, “வசந்த காலங்கள்….”, தாபங்களே….” இரவிங்கு தீவாய்…”, “அந்தாதி…” ஆகிய பாடல்களும், கதையோடு ஒட்டி உறவாடும் பின்னணி இசையும் சுபராகம்.

C.பிரேம்குமார் இயக்கத்தில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் அவரவரது ப்ளாஷ்பேக் பள்ளிப் பருவ காதலை தட்டி எழுப்பி, மலரும் நினைவுகளில் மூழ்க வைத்திருப்பதில் ’96, பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

அதே மாதிரி, “சில நேரம் எதுவுமே நடக்காது… இருந்தாலும், என்னவோ நடக்க போகுதுன்னு உள் மனசு சொல்லும்ல…”, “விசுவாமித்திரர் கூட இருக்கும் ரம்பா ஊர்வசி மேனகை.. எல்லோரையும் ஒரு நைட்டு உன்னை நம்பி உன் கூட விடலாம்… அவ்வளவு நல்லவன் நீ…. என்பன உள்ளிட்ட வசனங்கள் பலம். இயக்குனரின் சாய்ஸான நாபகர் விஜய் சேதுபதி, நாயகி த்ரிஷா இருவரும்… பெரும் பலம், என்றாலும், ’96 எனும் எல்லோருக்கும் ஈஸியாக புரியாத டைட்டில்… சற்றே பலவீனம்.

மேலும், இப்படி ஒரு காதலுக்கு இந்த காலத்தில் வாய்ப்பே இல்லை…. என்றாலும், இப்படி ஒரு காதலை பார்க்க எல்லாருக்கும் ஆசை இருக்கிறது. அந்த அளப்பரிய ஆசையே, நிச்சயம், இப்படத்தின் பெரு வெற்றியாக பிரதிபலிக்கக் கூடும்!

ஆகமொத்தத்தில், ’96 – ‘காதல் எனும் வார்த்தையைக் கூட பிடிக்காத வர்களையும் மிகவும் கவரும் 99% தூய்மையானகாதல் படம்.. என்பதால் 100% வெற்றி வாகை சூடும்!”

Rating: 3.5/5