YouTube video

Central Governement Decison on Anna University : தமிழகத்தின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் பட்டம் பயிலும் அனைத்து கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் IoE என்ற உயர் சிறப்பு அந்தஸ்தை வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு அறிவித்த IoE அந்தஸ்தை ஏற்பதா? என்பது பற்றி ஆராய தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள், 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

IoE அமலுக்கு வந்தால் தேவைப்படும் கூடுதல் நிதி, 69% இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை போன்றவைகள் என்னவாகும் என்பது பற்றி அரசின் குழு ஆராய்ச்சி செய்தது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1,575 கோடியைத் திரட்ட முடியும் என்பதால், தாமதிக்காமல் IoE அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சூரப்பாவின் கடித விவகாரத்தையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு IoE அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதாலும், கல்விக் கட்டணம் உயரும் இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதாலும் அதை ஏற்கப் போவதில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, IoE அந்தஸ்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு, மத்திய அரசுக்கு தனது அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தது போல், அண்ணா பல்கலைக் கழகத்தால் நிதியைத் திரட்ட முடியாது என்றும், கடந்த நிதியாண்டில், அண்ணா பல்கலைக்கழகம் ரூ.350 கோடி நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு, குழுவின் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கல்வி அமைச்சகம் தருவதாக அறிவித்த IoE என்ற உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக மத்திய கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமலும், கல்வி கட்டண உயர்வை தடுக்கவும் முடியும் என்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனால் பொறியியல் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.