வீடு வாசல் வரை வந்து நலம் விசாரித்த ரசிகர் குறித்து விக்ரம் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். சியான் விக்ரம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் விக்ரமின் விலா எலும்பு முறிந்ததாகவும், அதனால் சிறிது காலத்துக்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை சீக்கிரமாக குணமடைய வேண்டி சிவா என்னும் ரசிகர் ஒருவர் விக்ரமின் வீடு வரை சென்று அவரை வாழ்த்தி தன் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் “ஆஸ்கர் உங்களுக்காகக் காத்துள்ளது, நீங்கள் மீண்டு வருவதற்காக காத்திருக்கிறேன். என்றும் உங்களுடன் நாங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனைக் கண்டு நெகிழ்ந்து போன விக்ரம் “மிக்க நன்றி சிவா. வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். ஐ வில் பி பேக்” எனப் பதிவிட்டுள்ளார். இவர்களது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.