“உழைத்தால் உயரலாம் சரி! யார் உழைத்தால் யார் உயரலாம்?” பொருளாதார நிலைப் பற்றி இப்படியொரு கவிதை உண்டு.

இந்த வரிகளில் உள்ள அரசியலைப் பற்றிப் கலை வடிவில் பேச வேண்டுமானால் அதற்கு தேர்ந்த ஒரு கலைக் கூட்டணி வேண்டும்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமர்சியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச் சொல்லி விட்டாராம்.

அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லி விட்டாராம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அமைந்துள்ளதில் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்

மேலும் படம் பற்றி இயக்குநர் ஜனநாதன் கூறுகையில்,

“என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது.

நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன்.

இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும். இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி. நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்.

கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி புரொடக்சனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து லாபம் படத்தை தயாரித்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.