Vijay Kumar Speech
Vijay Kumar Speech

Vijay Kumar Speech – 2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா நேற்று (23-03-2019) சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குனர் விஜய்குமார் பேசுகையில்.“ இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் (POEM) இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.

நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள், நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்த படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையும் காப்பாற்றும்.

தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு நடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தை போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவது வரை சரியானமிக சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம்.

அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள்.

அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்.” என்றார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார் அவர்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது.

உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படபிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தார் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர்.

இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ உறியடி படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக உறியடி- 2 படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பது இதன் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களை இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில் உருவான படம்தான் இந்த உறியடி 2” என்றார்.

இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்.“ இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜய்குமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான் 96 படத்தின் இசையமைப்பு பணியை தொடங்கவில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது.

இயக்குனரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான-நேர்மையான- உண்மையான மனிதரை காண்பது அரிது. அவர் ஒரு அரிய ஜீன். இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும். அதுபோன்ற விரியுமுள்ள படைப்பு இது.” என்றார்.

YouTube video