தென்னிந்திய திரைப்படங்களின் வெற்றி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். மண் சார்ந்த கதைகளாக இயக்கி பல தேசிய விருதுகளையும் பெற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவரது இயக்கத்தில் அண்மையில் விடுதலை திரைப்படம் வெளியானது.

சூரி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில் தென்னிந்திய படங்களின் வெற்றி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ள பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் அதில், நம்முடைய அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகளைக் கொண்ட மண் சார்ந்த கதைகளை எடுப்பதால்தான் தென்னிந்திய படங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இதை செய்யாமல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டுமே படங்களை எடுப்பதால் தான் பிற மொழி திரைத்துறையினரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று படங்களின் வெற்றிக்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது