Varisu Thanksgiving Meet
Varisu Thanksgiving Meet

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.

தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் வெற்றியையும் புரொடக்சன் டிசைனராக இருந்து சமீபத்தில் எங்களை விட்டு மறைந்த சுனில் பாபுவுக்கு காணிக்கையாக செலுத்துகிறோம். வாரிசு ஒரு படம் அல்ல.. அது ஒரு நம்பிக்கை.. தளபதி விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வெற்றியாக்கிய தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் இந்த படம் துவங்கிய நாளிலிருந்து தெலுங்கு இயக்குனர் படம் என்றே சொல்லி வந்தது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது.. இது பக்கா தமிழ் படம் தான். நான் தமிழ் இயக்குனரா தெலுங்கு இயக்குனரா என்பதை தாண்டி முதலில் ஒரு மனிதன். அந்தவகையில் ரசிகர்களும் இந்த வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாரிசு படத்தில் வெற்றியால் உங்கள் நெஞ்சில் எனக்கு ஒரு இடம் கொடுத்து விட்டீர்கள்..

இந்த படம் ஆரம்பித்தபோதும், முடிவடைந்த போதும், அவ்வளவு ஏன், படம் இப்போது வெளியாகி இருக்கும் நிலையிலும் கூட விஜய் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் மகிழ்ச்சிதானே என்பதுதான். அந்த ஒரு வார்த்தை போதும். எனக்கு. இந்த படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜு நான் கேட்டதெல்லாம் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியை உயர்த்திப்பிடித்துள்ள இசையமைப்பாளர் தமன் இன்னும் நிறைய உயரம் போகவேண்டும் என வாழ்த்துகிறேன். பாடல் மட்டுமல்லாது கதை வசனத்திலும் ஒத்துழைப்பு தந்த விவேக், நேர்த்தியான படத்தொகுப்பை அளித்த பிரவீண் கே.எல் என அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தப்படம் பார்த்த என் தந்தை, படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் வெளியே வந்து என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். என் அப்பாவிடம் இருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன். படம் பார்த்த பலரும் அவர்களது அப்பா அம்மாவுக்கு போன் செய்து இந்த படத்தை பாருங்கள் என்று கூறியதை நேரிலேயே பார்க்க முடிந்தது. ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ராஷ்மிகா, சங்கீதா என எல்லோருமே இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றுள்ளார்கள்.. அனைவருக்கும் எனது நன்றி” என்று கூறினார்.

பட தொகுப்பாளர் பிரவீண் கே.எல் பேசும்போது, “இத்தனை வருடங்களில் எனது திரையுலக பயணத்தில் வாரிசு திரைப்படத்தில் பணிபுரிந்ததை மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ் பேசும்போது, “தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என இயக்குனர் வம்சி வருத்தப்பட வேண்டாம். தமிழ் ரசிகர்கள் உங்களை தங்களில் ஒருவனாக பார்க்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முகத்தில் எந்நேரமும் குடியிருக்கும் இந்த சிரிப்பை பார்க்கும்போது நாலாபக்கமும் இருந்து வசூல் கொட்டுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. தற்போது மலையாளத்தில் திலீப், தமன்னா நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்.. அங்கே விஜய் ரசிகர் ஒருவர் தனது கையிலும் முதுகுப்பக்கத்திலும் விஜய்யின் உருவத்தை பிரமாண்டமாக பச்சை குத்தி வைத்திருந்ததை பார்த்து பிரமித்து போனேன். அந்த அளவிற்கு கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.. பத்து வருடங்களுக்கு முன்பு தமனுடன் கிரிக்கெட் விளையாடிய சமயத்தில் அவர் குண்டாக இருப்பதால் இந்த பையன் வேண்டாம் என்று கூறினேன்.. ஆனால் அடுத்தடுத்து அவர் அடித்த சிக்ஸர்களை கண்டதும், உருவத்தை பார்த்து ஆளை எடை போடக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த படத்தில் தமன் அந்த அளவிற்கு துள்ளலான இசையை கொடுத்து ஆட வைத்துள்ளார்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசும்போது, “முதன்முதலாக மெர்சல் படத்திற்கு முழு பாடல்களையும் எழுதும் பொறுப்பை என்னை நம்பி கொடுத்தார் தளபதி விஜய். அதேபோல இந்த வாரிசு படம் மூலம் முதன்முதலாக வசனம் எழுதும் மிகப்பெரிய பொறுப்பையும் என்னை நம்பி விஜய்யும் இயக்குனர் வம்சியும் ஒப்படைத்தார்கள். அதை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். தளபதி விஜய் நீண்ட நாள் கழித்து இந்த படத்தில் இளைய தளபதியாக இன்னும் படு யூத்தாக மாறிவிட்டார். காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், பஞ்ச் டயலாக் என எல்லாவற்றையும் ஒரு ஹீரோ பிரதிபலிக்க முடியுமா என்று யாரவது கேட்டால், இதெல்லாம் ஒரு விஷயமா என அசால்ட்டாக நடித்து செல்பவர் தான் விஜய். இந்த படத்திலும் அந்த மாயாஜாலத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். படத்தில் யோகிபாபு கேரக்டர் பற்றியும் விஜய்யிடம் அவர் பேசும் வசனங்கள் பற்றியும் சொன்னபோது எந்தவித ஈகோவும் இல்லாமலும் உடனே ஒப்புக்கொண்டார் விஜய். குறிப்பாக பூவே உனக்காக படத்தில் அவர் பேசிய வசனத்தையே காமெடியாக மாற்றலாம் என முடிவு செய்தபோது எங்களுடன் அழகாக விவாதித்து அந்த காட்சியை கலகலப்பாக மாற்றினார் விஜய்.

தளபதி விஜய் படத்திலிருந்தும் முதல்பாதி வரை பெரிய அளவில் சண்டை காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அது இயக்குனர் வம்சியின் தைரியத்தை காட்டுகிறது. இந்த படத்தில் சரத்குமாரின் நடிப்பை பார்த்துவிட்டு நன்றாக கவனிக்கப்படாமல் போன நல்ல நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர் என பலரும் தங்களது ஆதங்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு அருமையான காட்சி ஒன்று படத்தில் நீளம் காரணமாக இடம் பெறவில்லை. அதை எப்படியாவது விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “இவ்வளவு பெரிய ஸ்டார் நடித்துள்ள படத்தில் ஒரு அம்மா பாடலை இரண்டரை நிமிடத்திற்கு மேல் வைத்து உணர்வு பூர்வமாக அதை அனைவரும் ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர் வம்சி. இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானபோதே, ஏற்கனவே மாஸ்டர், பீஸ்ட் படங்களில் இசையமைப்பாளர் அனிருத் பிரித்து தள்ளிவிட்டார் அதை தாண்டி நாமும் ஏதாவது பண்ணி ஆகணுமே என்கிற எண்ணம் மனதில் ஏறிவிட்டது. வெற்றி என்பது உடலில் ஓடும் ரத்தம் மாதிரி. அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார்.

நடிகை சங்கீதா பேசும்போது, “நீண்டநாள் கழித்து இப்படி ஒரு மேடையில் ஏறுவதற்கு வாரிசு படம் வழிவகுத்து கொடுத்துள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காக இதுவரை நான் யாருக்குமே நன்றி சொல்லவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். அதற்கு ஒரு வாய்ப்பை இப்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். இயக்குனர் வம்சி இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது கதை பற்றியோ கதாபாத்திரம் பற்றியோ எதுவும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் ஹைதராபாத்தில் எனக்கு இன்னொரு சகோதரர் வீடு இருக்கிறது என்றால் அது இயக்குனர் வம்சியின் வீடு தான். இந்த படத்தில் நடித்த போது விஜய் சாருடன் நாங்கள் அனைவருமே 40 நாட்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். 25 வருடத்திற்கு முன்பு அவரிடம் பார்த்த அதே பணிவு, உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு என எதுவுமே மாறவில்லை. ஆனால் உருவத்தில் மட்டும் இன்னும் இளமையாக, வெளியில் இன்னும் வேகமாக மாறி இருக்கிறார்.

இந்த படம் பார்த்தபோது என் அருகில் இருந்த குழந்தை முதல் வயதான ரசிகர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்த்துவிட்டு உடனே விஜய் சாருக்கு போன் செய்து, எல்லோருமே உங்களை லவ் பண்றாங்க சார்.. எப்படி இது என கேட்டேன் இந்த விஷயத்தை அப்படியே இயக்குனர் வம்சியிடம் சொல்லுங்கள் என்று சொன்னார் விஜய். தெலுங்கு இயக்குனர் என்று சொல்கிறார்களே என வம்சி வருத்தப்பட வேண்டாம். நாங்கள் தமிழ் ரசிகர்கள் தெலுங்கு இயக்குனர்களை அண்ணாந்து பார்க்கிறோம். முந்தைய படத்தில் ராஷ்மிகாவுக்கு அம்மாவாக நடித்தேன்… இதில் அக்காவாக நடித்துள்ளேன்” என்று கூறினார்.

நடிகர் ஷாம் பேசும்போது, “ஒரே சமயத்தில் வாரிசு துணிவு என இரண்டு படங்களும் வெளியான சூழ்நிலையில் இதை அழகாக கையாண்டு இரண்டு படங்களையும் சமமாக பாவித்த உதயநிதி ஸ்டாலினுக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் தில் ராஜு தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது அவர் ரொம்ப ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தமிழில் இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இயக்குனர் வம்சி ஒரு அருமையான மனிதர். அழகான மனம் கொண்டவர். அதுதான் இந்த படமாக வெளிப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டப்பிங் முடித்துவிட்டு வரும்போது படம் எப்படி இருக்கிறது என என்னிடம் வம்சி கேட்டார். நாம் எவ்வளவுதான் அழகாக எடுத்து இருந்தாலும் டப்பிங், எடிட் பண்ணி இருந்தாலும் பின்னணி இசையில் தான் இந்த படத்தோட வெற்றியை தூக்கி நிறுத்தும் என்று கூறினேன். அது உண்மை என படம் பார்க்கும்போது நிரூபித்து விட்டார் இசையமைப்பாளர் தமன். படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது நிறைய பேர் கண்கலங்கினார்கள். படப்பிடிப்பில் விஜய்யுடன் பழகிய நாட்களில் நான் கவனித்த ஒரு விஷயம் அவர் யாரைப்பற்றியும் எதிர்மறையாக பேசமாட்டார். யாரைப் பற்றியாவது எதிர்மறையாக சொன்னால் கூட கேட்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அப்போது இருந்து இப்போது வரை அதை கடைபிடித்து வருகிறார்.

புறம்போக்கு படத்தில் நடித்த பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளி விழுந்துவிட்டது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு சரியான படமாக வாரிசு வந்தபோது தளபதி விஜய் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது அந்த இடைவெளியை இந்த படம் நிரப்பி விட்டது. படம் பார்த்துவிட்டு பல நண்பர்கள் என்னை அழைத்து பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, “விஜய் நடித்த படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல தெலுங்கில் ஆக்சன் பட ஹீரோக்களான ஜூனியர் என்டிஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் மிஸ்டர் பர்ஃபெக்ட், மகேஷ்பாபுவின் சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவை எல்லாமே மாஸ் ஹீரோக்களின் குடும்ப கதையம்சம் கொண்ட படங்கள். அப்படி இந்த வாரிசு படத்தின் கதையை வம்சி என்னிடம் சொல்லியபோது இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.. விஜய்யுடன் ஒரே சந்திப்பிலேயே இந்த கதை ஓகே ஆனது.

சில படங்கள் தயாரிக்கும்போது பணம் நிறைய கிடைக்கும். சில படங்களில் பாராட்டு கிடைக்கும். இந்த வாரிசு படத்தில் பணம், பாராட்டு என இரண்டுமே ஒரு சேர கிடைத்துள்ளது. குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோருமே இந்த படத்தை ரசித்து பாராட்டுகிறார்கள். வாரிசு இப்போதுதான் ஐந்து நாள் குழந்தையாக இருக்கிறது. மிக நீண்ட தூரத்திற்கு இந்த படத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஒரு மாதத்திற்கு பிறகும் கூட இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடும். காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை வந்து பார்ப்பார்கள்” என்று கூறினார்.

நடிகர் சரத்குமார் பேசும்போது, “தமிழில் எப்படி தயாரிப்பாளர் ஆர்பி.சௌத்ரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து தயாரிக்கிறாரோ அதுபோன்று தான் தெலுங்கில் தில் ராஜூவும். பெயருக்கேற்றபடி தில்லானவர். இயக்குனர் வம்சி தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என்று கவலைப்பட வேண்டாம் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதில் வெளிப்படும் வார்த்தைகளில் பிழை கண்டுபிடிக்க தேவையில்லை. அப்படி பேசும்போது தவறு கண்டுபிடித்தாலும் நாம் அதற்கு விளக்கம் அளிக்கவும் தேவையில்லை..

இந்த படத்தில் விஜய்யுடன் நடித்ததால் அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் நான் சென்றுள்ளேன். சொல்லப்போனால் இப்போது நான் 40 வயது இளைஞனாக தான் உணர்கிறேன். பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் வசனகர்த்தாவாகவும் பிரமிக்க வைத்துள்ளார். அவரிடம் சில வார்த்தைகள் குறித்து விவாதித்தேன். அந்த அளவிற்கு நல்ல வசனங்களை இந்த படத்தில் கொடுத்துள்ளார் விவேக்.

நடிகை சங்கீதா ஸ்ரீகாந்தை கன்னத்தில் ஓங்கி அறையும் காட்சியை பார்த்து அதிர்ந்தேன். நிஜமாகவே அறைந்தாரா என தெரியாது. ஏனென்றால் ராதிகா இதுபோன்ற விஷயத்தில் அப்படித்தான் அறைந்து விடுவார்.. இந்த படத்தில் உறவுகள் பற்றிய ஒரு அழகான மெசேஜ் இருக்கிறது. அதனால் பலரும் இரண்டாவது முறை, மூன்றாவது முறை என குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள். வாரிசு படத்துடன் வெளியாகி உள்ள துணிவு படமும் ஹிட் ஆகட்டும்.. அதேபோல இங்கே வெளியுள்ள பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களும் நன்றாக ஓட வேண்டும்.. அப்படி ஓடினால் தான் இந்த திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும்” என்று கூறினார்.

YouTube video