
Vaiko, MK Stalin vs Tamilisai Soundararajan – சென்னை: ‘கலப்பு திருமணம் என்பது கட்டாயப்படுத்தி வரக்கூடாது என்றும், வைகோவின் சண்டைகளால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது’ என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக , அம்பேத்கர் படத்தின் முன்பாக நின்று கொண்டு, இளைஞர் ஒருவர், சில குறிப்பிட்ட ஜாதிகளின் பெயரை சொல்லி, அந்த ஜாதி பெண்களை கட்டுவோம், கட்டியணைப்போம்!
என்று உறுதிமொழி எடுப்பதை போலவும், அதற்கு பிற இளைஞர்கள் வழிமொழிவதை போலவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ குறித்து நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: “கலப்பு திருமணம் செய்வதை நான் எதிர்க்கவில்லை. ஜாதி ஒழிய, கலப்பு திருமணத்தை ஆதரிப்பதாக காந்தியே கூறியுள்ளார்.
ஆனால், கலப்பு திருமணம் என்பது இயல்பாகவே மனதில் வர வேண்டும், அது பிறர் இயக்கி, கட்டாயபடுத்தி வர கூடாது.. அன்பால் இயல்பாக வர வேண்டும். இவ்வாறு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு நடப்பதை ஏற்று கொள்ள முடியாது” இவ்வாறு கூறினார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, மீத்தேன் ஆய்வுக்கு கையெழுத்திட்டார்.
அதுபோல தற்போது, மேகதாது ஆய்வுக்குதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதே தவிர, அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை.
மேலும் வைகோ, முதலில் துரைமுருகனோடு சண்டையிட்டார். தற்போது, திருமாவளவனுடன் சண்டைபோடுகிறார்.
இதனால் “திமுக கூட்டணியில் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரின் இந்த சண்டைகளால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது”. இவ்வாறு தமிழிசை நிருபர்களிடம் தெரிவித்தார்.