Vada Chennai Review
Vada Chennai Review

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா, ராதாரவி, சுப்ரமணியம் சிவா… நடிப்பில் தனுஷின் “வொண்டர் பார்” பட நிறுவனமும், “லைக்கா புரொடக்ஷன்ஸு”ம் இணைந்து தயாரிக்க, சற்று, நீண்ட நெடிய 2 மணி நேரம் 46 நிமிட…(166.16 …) படமாக வெளியாகி இருக்கிறது “வடசென்னை” திரைப்படம்.

இது போதாதென்று. உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான ஒப்பனிங்கோடு முடிகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வர இருக்கும் இதன் இரண்டாம் பாகமும் ( 2019-ம் ஆண்டு ), மூன்றாம் பாகமும் (2020-ம் ஆண்டு) இதே மாதிரி “ஏ” சான்றிதழ் படமாக வந்து விடக் கூடாது எனும் பயமும் இருக்கிறது.

தனுஷ் – வெற்றிமாறன் – வேல்ராஜ் கூட்டணி படமென்பது…. பெரும் பலம் என்றாலும், என்ன தான், “ஒம்மால, தூம பாடு, மயிரு…” உள்ளிட்ட கெட்ட வார்த்தைகளும், வசனங்களும் வட சென்னைக்கு, நாம் சென்று வந்த பீலிங்கை கொடுக்கிறது என்றாலும, தனுஷுக்கு சிறுவர் சிறுமியர் ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு. அவர்களை ஏமாற்றும் விதமாக இந்தப் படம், “ஏ” சான்றுடன் வந்திருப்பதும் படத்தில் இடம்பெறும் கெட்ட கெட்ட வார்த்தை களும் பெரும் பலவீனம்.

கதைப்படி, கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞர் அன்பு – தனுஷுக்கு கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும்… என்பது லட்சியம். அந்த ஏரியா மக்களுக்காக பாடுபடும் தாதா ராஜன் -அமீர், கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பித்து தனுஷை ஊக்கப்படுத்துகிறார்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி இருவரும் இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார். அதனால் காசுக்கு ஆசைப்படும் அவரது ஆட்களாலேயே அவர் கொல்லப்படுகிறார். அதனால், தனுஷின் கேரம் லட்சியம் நிறைவேறாமல் போகிறது. இதனால் தாதாயிஸத்தில் குதிக்கும் தனுஷ் அமீரை தீர்த்து கட்டியவர்களை போட்டுத்தள்ள களம் இறங்குகிறார்.

இதற்கிடையே பக்கத்து ஏரியாவில் இருக்கும் பத்மா – ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், அன்பு – தனுஷுக்கும் இடையே சின்ன சின்னதாக மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதலை ஏற்படுத்துகிறது.

தனுஷின் காதல் வென்றதா? தாதாயிஸம் அந்த காதலை கொன்றதா..? எனும் கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா, ஆண்ட்ரியா, ராதாரவி, மூணாறு ரமேஷ்… உள்ளிட்டோருக்கும் இந்த படத்தில் என்ன மாதிரியான ரோல்..? என்பதற்கும் வித்தியாசமாகவும், விறுப்பாகவும் விடையளிக்கிறது இப்படத்தின் மீதிக் கதையும், களமும்!

ஆரம்பத்தில் அமைதி நாயகராக’கேரம்’ பிளேயர் அன்பு வாக வரும் தனுஷ், அதன் பின் தாதா தனுஷாக அசத்தியிருக்கிறார் தன் உருவத்தை குறைத்து மதிப்பிடும் எதிராாளியிடம் “தவ்ளோண்டு ஆங்கர் தான் அவ்ளோ பெரிய கப்பலையே கண்ட்ரோல் பண்ணுது…” எனும் “பன்ச்” அடிக்கும் இடங்களில் “பச்ச க் “என ரசிகன் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷிடம் பார்க்கும் இடத்தில். எல்லாம் திட்டு வாங்கும் தனுஷ், அதன்பின் ஐஸ் ராஜஸை “லிப் டூ லிப்” கிஸ் களாலேயே அசரடிக்கும் இடங்கள் ரசனை. அதே மாதிரி, எதிரிகளிடம் சண்டை செய்யும் ஆக்ஷன் காட்சிகளிலும். தனுஷ், வடசென்னை கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்!

ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. “ஒம்மால.. தூம பாடு…” என வாயை திறந்தாலே கூவம் பாய்ந்தோடும் வக்ர வசனம் பாடும் இந்த பொண்ணு உண்மையாகவே வட சென்னையா தான் இருக்குமோ? என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. “காக்கா முட்டைக்கு”ப் பின் தனது கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா.

தனுஷுக்கு ஜோடியாக இல்லை என்றாலும், மற்றொரு நாயகியாக வரும் ஆண்ட்ரியா, வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்… எனலாம்.

இன்னும் பிற நட்சத்திரங்களில், பிரபல இயக்குனர் அமீர் வட சென்னை வாழ்டானாக இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார், மூணாறு ரமேஷ், பாவல் நவகீதன், சீனு மோகன், “திருடா திருடி” டைரக்டர் சுப்ரமணியம் சிவா, அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில், “சந்தனத்தைகரைச்சு தான்டா கக்கத்துல பூச…” உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் பக்கா மாஸ். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் வட சென்னையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது.. என்பது சூப்பர்ப்!

வெற்றிமாறன் இயக்கத்தில், தன்னை கை தூக்கி விட்டதோடு, அந்த ஊருக்கும், மக்களுக்கும், நல்லது செய்யும் நல்ல தாதாவை கொன்ற அவரது நம்பிக்கைத் துரோகிகளை, கொல்லும் இளம் தாதாவே…. இப்பட நாயகர் தனுஷ்…. எனும் கான் செப்ட், தமிழ் சினிமாவுக்கு, புதுசு இல்லை… என்றாலும், இந்தப்படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா.. உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர்… எனும் ஒப்பனிங் காட்சிப்படுத்தலே இப்படத்தின் மீதான சஸ்பென்ஸை கூட்டுவது படத்திற்கு பெரிய பலம்.

அதே போன்று, வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? அமீரின். விசுவாசியாக காட்டிக் கொள்ளும் தனுஷ், அந்த ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்..? என்னும், இன்னும் வினாக்களுக்கான பதில்கள்… காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதமும் மிரட்டலாக இருக்கிறது. வெற்றி மாறனின் இப்பட பாத்திரப் படைப்புகளில், “ஜெயிலுக்குள்ள வந்தா திருடக் கூடாது பொய் சொல்லத் கூடாது “எனப்புது கைதிகளுக்கு அட்வைஸுக்கும் சிறைக் கைதிகள் ரசனை.

அதே மாதிரி, வடசென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள்… என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி வேகம், விவேகமாக படமாக்கப்பட்டிருப்பது ஆறுதல். அதே நேரம் படம் முழுக்க பரவி விரவிக் கிடக்கும் வெட்டு குத்துகளும், இரத்தமும் சதையுமான காட்சிகளும் சற்றே குமட்டலை ஏற்படுத்துகின்றன.

ஆக மொத்தத்தில், “வடசென்ன’ – ”ஏ’ படமென்றாலும், ‘ஏ’ சென்டர் படமில்லை..!”

Rating: 3.75/5

YouTube video