Today IND vs AUS
Today IND vs AUS

Today IND vs AUS – இன்று இரண்டாவது ‘டி-20’ போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடக்க உள்ளது.

இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு சரியான பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று, இரண்டாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.

சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் நடந்த முதல் போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த சோகத்தில் இந்திய அணி உள்ளது. இப்போட்டியில் ஏமாற்றிய ரோகித் சர்மா எழுச்சி கண்டால் நல்ல துவக்கம் கிடைக்கும்.

ஷிகர் தவானுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கி அரைசதமடித்த இளம் வீரர் லோகேஷ் ராகுல் மீண்டும் அதே போல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் கேப்டன் கோலி, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் ‘மிடில்-ஆர்டரில்’ கைகொடுத்தால் நல்ல ரன் ரேட் எடுக்கலாம்.

நடந்து முடிந்த முதல் போட்டியில் தோனி 37 பந்துகளில் 29 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்தது. அனுபவ வீரரான இவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஆல் ரவுண்டர்’ குர்னால் பாண்ட்யா ரன் சேர்ப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்.

எதிரணியை திக்குமுக்கு ஆட செய்வதில் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். இவரது நுணுக்கமான ‘வேகம்’ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை தருகிறது.

சக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்களை தந்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

எனவே இவருக்குப் பதில் சிராஜ் அல்லது தமிழகத்தின் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

கடந்த முறை ‘சுழலிலும்’ ஏமாற்றமே கிடைத்தது. சகால் 4 ஓவருக்கு 28 ரன் அளித்தார். மேலும் புதிதாக இணைந்த அறிமுக பவுலர் மார்க்கண்டேவும் 4 ஓவருக்கு 31 ரன் அளித்து சொதப்பினார்.

பேட்டிங், பவுலிங்கில் என இரண்டிலும் இந்திய அணி எழுச்சி கண்டால் மட்டுமே இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முடியும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஷார்ட், ஹேண்ட்ஸ்கோம்ப் என வளர்ந்து வரும் வீரர்கள் அசத்துவது இந்தியாவுக்கு பாதகமானது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் மீண்டும் சாதிக்கலாம்.

எனவே இவரை இன்று விரைவில் வெளியேற்றுவது பவுலர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். முதல் போட்டியில் ‘டக்-அவுட்’ ஆன கேப்டன் பின்ச் எழுச்சி பெறலாம்.

கடைசி ஓவரில் சாதுர்யமாக விளையாடி வெற்றி தேடித்தந்த கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் மீண்டும் நெருக்கடி தர வாய்ப்புள்ளது.

‘வேகக்கூட்டணி’ கூல்டர் நைல், கம்மின்சிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவு.

பெங்களூரு மைதானத்தில் இரு அணிகளும் முதல் முறையாக ‘டி-20’ போட்டியில் மோதவுள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை இங்கு விளையாடிய 2 ‘டி-20’ போட்டியிலும் வென்றுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக இங்கு விளையாடிய ஒரு ‘டி-20’ போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

பெங்களூரு மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் முதலில் ‘பேட்’ செய்யும் அணி, இமாலய இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ரசிகர்கள் வாணவேடிக்கைக்கு பஞ்சம் இருகாது.