TN Minister KA Sengottaiyan
TN Minister KA Sengottaiyan

TN Minister KA Sengottaiyan – குமாரகிரி: கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி கிராமத்தில் சி.கே.டி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 20-வது ஆண்டு விழா நேற்று நடந்தது.

இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, ‘இந்த அறக்கட்டளை சார்பில் அடுத்த ஆண்டு கல்லூரி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும். மேலும் தனியார் பள்ளிகளை போல் தமிழக அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இதனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உயர்ந்த நிலை அடைவார்கள்’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 11 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.

அதே போல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மினி லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் “கல்விக்காக தனி தொலைக் காட்சி சேனல் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும், அதன் அலுவலகம் சென்னை அண்ணா நூலகத்தில் அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கல்வி சம்பந்தமாக இந்த அறக்கட்டளை எந்த முயற்சி எடுத்தாலும் அரசு உறுதுணையாக இருக்கும்”. இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகேசன், மாவட்ட கல்வி அதிகாரிகள் கோவில்பட்டி சீனிவாசன், தூத்துக்குடி வசந்தா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.