
Thol Thirumavalavan in DMK – விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அங்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், ” விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில், முறைப்படி பணி நியமனம் பெற்று, 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமையலர்கள் 46 பேரை பணி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
அவர்கள் மீண்டும் தொடர்ந்து பணியில் ஈடுபட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் அளித்த கட்டுப்பாடு காரணமாக, இதனை நம்பியிருந்த 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
இந்நிலையில், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்ய நிவாரண நிதியாக 15 ,000 கோடி தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது’ .
இந்த நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும்” இவ்வாறு கூறினார்.
மேலும் ” திமுக உடனான உறவில் எந்தவித இடைவெளியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நாங்கள் 2ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் தோழமை கட்சியாக இருந்து வருகிறோம்.
இது கூட்டணியாக மாற வேண்டும் என்பதே எங்களது எண்ணம்” இவ்வாறு தெரிவித்தார்.