murugan
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Thiruvarur Murugan surrender in Bangalore court – திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை 1 மணியளவில், சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் குழந்தைகள் அணியும் முகமுடி அணிந்து அவர்கள் நகைகளை திருடி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த திருட்டு சம்பவம் திருச்சி போலீசாருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் என்பவரின் தாய் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார்.

trichy

இந்த வழக்கில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல மாநிலங்களில் கொள்ளையடித்த திருவாரூர் முருகன் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

முருகன் செல்போன் பயன்படுத்துவதில்லை. எனவே, அவரை பிடிக்க போலீசார் பல வழிகளில் முயன்று வந்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை முருகனிடமே இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூர் நீதிமன்றத்தில் முருகன் இன்று சரணடைந்தார். சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட முருகன் சில வருடங்களுக்கு முன்பு கொள்ளையடித்த பணத்தில் ரூ.50 லட்சம் செலவு செய்து ஒரு திரைப்படத்தையும் தாயாரித்தார்.

அதில், சுரேஷ் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. தற்போது திரைப்படம் தயாரிக்கவே அவர் நகைக்கடையில் கொள்ளை அடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.