
Thambi Durai Controversial Speech – திருச்சி : ‘தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய கட்சிகள் செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்’ .
திருச்சி மாவட்டம் , மணப்பாறை பகுதியில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்கம்பங்கள், வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இவ்வாறு ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “கஜா புயல் பாதிப்பு கடலோர மாவட்டங்களுக்கு இணையாக மணப்பாறை, மருங்காபுரியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புயலால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வருகிறேன், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது” .
இவ்வாறு பேசிய அவர் , “கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஏன் கூட்டத்தை கூட்டாமல் அணை விவகாரத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்? என கேள்வி எழுப்பினார். மேலும், இது அரசியல் நாடகம் இதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை செயல்பட்டு வருகிறது. நாங்கள் நேரில் சென்று நிவாரணம் கேட்ட பிறகு தான் தமிழகத்திற்கு மத்திய குழுவை அனுப்பி உள்ளது. அதேசமயம், கேரளாவில் பாதிப்பின் போது உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி நிதி வழங்கினார்.
ஆனால் இதுவரை தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. மேலும், ‘முன்னதாக கேட்ட நிவாரணம் தொகையான 18 ஆயிரம் கோடியை இன்னும் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்கவில்லை, மத்திய குழு அறிக்கைக்கு பிறகு தருவதாக சொல்லி இருக்கிறார்கள். தொடர்ந்து மத்திய அரசு தமிழக அரசை வஞ்சித்து வருகிறது ‘ இவ்வாறு கூறினார்.