Lord Murugan

அறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது  தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தையொட்டி தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

☆ தைப்பூசம் தோன்றிய வரலாறு:

தேவர்களுக்கும்,அசுரர்களுக்கும் இடையே மூண்ட போரில், அசுரர்களை அழிக்க முடியாமல் திணறிய தேவர்கள், சிவபெருமானின் அருளை நாடினர்.

முக்கண் நாயகனை நேரில் சந்தித்து தேவர்கள் முறையிட்டதால், எம்பெருமான் தனது மாபெரும் சக்தியால் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. அதுவே முருகன் அவதாரம் ஆகும்.

கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர். 6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.

☆ ஞானவேல் அளித்த இடம்:

சிவனில் பாதியான சக்தியுடையாள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் குடியேறிய முருகபெருமானுக்கு ஞானவேலை தந்தருளியது ‘தைப்பூச’ தினத்தன்று என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

☆ அசுரவதம்:

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன், தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து, தேவர்களை நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.

எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

☆ பக்தர்களின் தைப்பூசம்:

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்று, காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here