தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மழை இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது :

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிகமான மழை பெய்ய வாய்ப்புண்டு. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.