
Tamil Nadu Rain : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ” தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் காற்றழுத்தம் நீடிக்கிறது.
மேலும், தென்தமிழகத்தில், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது படிப்படியாக அதிகரித்து நாளை மற்றும் 6- ஆம் தேதி வரை, தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 6 – ஆம் தேதி முதல் புயலாக மாறி, காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சார்ந்த கடலோர கர்நாடக பகுதிகளை மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா, தெற்கு கர்நாடகா போன்ற பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டமாக இருக்கும், மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.