Tamil Nadu Government Order on Temples Opening
Tamil Nadu Government Order on Temples Opening

Tamil Nadu Government Order on Temples Opening : ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ஓட்டுநர் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால்:-

மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை!

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை (Standard Operative procedures) பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும்.

அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை (Standard Operative procedures) பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10.8.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.