Taj Mahal
Taj Mahal

Taj Mahal – உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணம் ரூ.50 இல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில், “17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண சுற்றுலா பயணிகளுக்கு இதுவரை ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தாஜ்மஹால் தற்போது மாசடைந்து வருவதாக பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு காரணம் சுற்றுலா பயணிகள் வருகை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இவ்வாறு நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்றிலிருந்து, ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹாலை காண தினம்தோறும் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலா பயணிகள் இந்த திடீர் கட்டண உயர்வை கண்டு அதிர்ச்சியில் உள்ளனர்.