Surjth Death Issue Dmk Chief Raise Question To Tamilnadu CM dappadi K. Palaniswami
Surjth Death Issue Dmk Chief Raise Question To Tamilnadu CM dappadi K. Palaniswami

சென்னை: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக நன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதல்வர், அனைத்தும் பொய் என ஒரே வார்த்தை கூறி விட்டு கடந்து போகக் கூடாது.

மேலும் ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா? என்று சற்றும் அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை, சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என் சந்தேகத்தைக் கேட்டேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

மேலும் கற்பனை உலகில் மிதக்கும் முதலமைச்சரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான் என சரமாரியாக தாக்கி பேசிய ஸ்டாலின், “ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் அனுபவம் தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கு இல்லை. எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம்”(!?) என்று அந்தப் படையின் செய்தித் தொடர்பாளரே பேட்டியளித்திருப்பது, தமக்கு அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

எனவே ‘அனுபவம் இல்லாத தேசியப் பேரிடர் மீட்புப் படையை அழைத்து காலத்தை விரயம் செய்ததற்குப் பதில், ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அதிமுக அரசின் தோல்விதானே?’ என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு மாநிலத்தின்,நாட்டின் மற்றும் அந்த வீட்டின் எதிர்காலமாக இருந்த குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்பதில் படுதோல்வி கண்டுள்ள தங்களின் பதிலையும் விளக்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்..

முதல்வரின் பதிலை நான் மட்டுமல்ல, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றத் தவறியதில் அதிமுக அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.