ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோரத்தினம் அவர்களின் பூத உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்தவர் ஜூடோரத்தினம். . இவர், ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் SP.முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை, சகலகலாவல்லவன் பாயும்புலி போக்கிரி ராஜா போன்ற பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் 1200 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கும் இவர் SP முத்துராமன் இயக்கிய 70 படங்களில் 40 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் 95 வயதை நெருங்கிய ஜூடோ ரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இன்று அவரது பூத உடலுக்கு திரை பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ஸ்டண்ட் இல் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் வென்றவர் தான் ஜூடோரத்தினம். முரட்டுக்காளை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரயில் சண்டை காட்சி தற்போது வரை மக்கள் மனதில் நிலைத்திருக்கும், அவருடன் பணிபுரியும் அனைத்து ஸ்டாண்ட் கலைஞர்களின் பாதுகாப்புக்கு அவர் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் ஒரு நல்ல மனிதர் என்று ஜூடோரத்தினம் குறித்து நடிகர் ரஜினி செய்தியாளர்களிடம் வருத்தத்துடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.