Steve Smith
Steve Smith

Steve Smith – பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் முடிந்ததால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐ.பி.எல், தொடரில் ராஜஸ்தான் அணியுடன் இணைந்தார்.

கடந்த மார்ச் 2018ல், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட்டிற்கு சோதனையாக அமைந்தது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் பான்கிராப்டிற்கு 9 மாத தடை விதிக்கப்பட்டது.

மற்ற இருவருக்கும் தலா ஒரு ஆண்டு போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தடை விதித்தது. ஸ்மித், வார்னரின் தடைக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதற்கிடையே, வரும் 23ல் துவங்கவுள்ள ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரில் ராஜஸ்தான் அணியில் இணைவதற்காக ஸ்மித் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். பின், பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.

இது குறித்து ராஜஸ்தான் அணியின் ‘டுவிட்டரில்’ ஸ்மித் வெளியிட்ட ‘வீடியோவில்’,’ ராஜஸ்தான் அணியுடன் உற்சாகத்துடன் இணைந்துள்ளேன். ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்,” என, தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி விளம்பர துாதர் வார்ன் கூறுகையில்,” உலக கிரிக்கெட் அரங்கில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் நட்சத்திரமாக திகழ்கின்றனர். உலக கோப்பைக்கு முன் இவர்கள் ஐ.பி.எல்., தொடரில்தான் பங்கேற்கின்றனர்.

இதனால், அபாரமாக செயல்பட வேண்டும் என்ற வேட்கை, ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 22ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியினரை துபாயில் ஸ்மித், வார்னர் சந்தித்தனர்.

இது குறித்து வார்னர் கூறுகையில்,” ஆஸ்திரேலிய அணியினர் எங்களை திறந்த மனதுடன் வரவேற்றனர். எங்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதைப்போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் சாதிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.