SriLanka Terror Attacks
SriLanka Terror Attacks

SriLanka Terror Attacks :

கொழும்பு: கொழும்புவின் கம்பஹாவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் இலங்கையில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகின்றனர்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த போது, 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர்.

இதை தொடர்ந்து தற்போது இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை பாதுகாப்பு படையினரும், சிஐடி மற்றும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இலங்கை தாக்குதல் தொடர்பாக இதுவரை 60 பேரை கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் 8 இடங்களில் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேரின் பெயர் வெளியிடப்பட்டது.

அதில் அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு முஹம்மத், அபு அல் பாரா, அபு அப்துல்லா ஆகியோர் பெயர் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு, கொழும்புவில், பூகொட என்ற இடத்தில் நீதிமன்றம் அருகே தற்போது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை என்று இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.