Sleeping Problem :
Sleeping Problem :

Sleeping Problem :

☆ இரவு தூங்கி காலையில் எழுந்து பார்க்கும்போது தலையணை ஈரமாகவும், ஆங்காங்கே வெள்ளைக் கறை படிந்தும் இருக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இது தூக்கத்தின்போது வாயிலிருந்து எச்சில் வழிவதால் ஏற்படுகிறது.

☆ சிலருக்குப் பயணத்தின்போது உறங்கிய நிலையில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கும்.

☆ பொதுவாக மனித உடலில் உமிழ்நீர் சுரப்பியால் ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் எச்சில் சுரக்கும். தூங்கும் சமயங்களில் நமக்குத் தெரியாமல் வெளிவரும் எச்சிலைத்தான் `ஜொள் வடிப்பது’ என்றும் ஆங்கிலத்தில் `ட்ரூலிங்’ (Drooling) என்றும் சொல்கிறோம்.

தூக்கத்தில் வாய் திறந்திருப்பதே, எச்சில் வெளிவருவதற்கு முக்கியக் காரணம்.

☆ தூக்கத்தில் எச்சில் வடிப்பதற்கான காரணங்கள்:

1. வயது – குழந்தைகள் எச்சில் வடிப்பது பொதுவானது. குழந்தைகளால் முகத் தசைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாததால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட எச்சில் வடித்துக்கொண்டே இருப்பார்கள். 2 வயதுக்கு மேல் இது குறையத் தொடங்கும்.

2. தூங்கும் நிலை – முதுகைத் தரையில் நேராக வைத்துத் தூங்கும்போது எச்சிலைச் சுலபமாக விழுங்கிவிடலாம். அதுவே, பக்கவாட்டில் திரும்பிப் படுக்கும்போது எச்சில் வாயின் ஒரு பக்கம் சேர்ந்துவிடுவதால் தூக்கத்தில் எச்சில் வழிகிறது.

3. ஒவ்வாமைகள் மற்றும் சளி – ஒவ்வாமை மற்றும் சளிப் பிரச்னைகளால் ஏற்படும் மூக்கடைப்பால் தூக்கத்தில் எச்சில் வழியக்கூடும்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள் பொதுவாக வாயால் மூச்சுவிடுவார்கள். வாயால் மூச்சுவிடும்போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் என்பதால் தூக்கத்தில் எச்சில் வழியும்.

4. தொண்டைப் பிரச்னைகள் – தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது எச்சிலை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் எச்சிலை வாய் வழியாக வெளியேற்றும்.

5. மன அழுத்தம் – மனஅழுத்தத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளில் அதிகமாக உமிழ் நீர் சுரப்பதும் ஒன்று.

6. அஜீரணம் – அஜீரணப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு உமிழ் சுரப்பி அதிகமான உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. அதிகமான உமிழ் நீர் சுரப்பதால் தூக்கத்தில் எச்சிலை விழுங்க முடியாத நிலை ஏற்படும்.

7. மருந்துகள் – தூக்கத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். அதுமட்டுமன்றி, தூக்கத்துக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் தன்னை மறந்து ஆழ்ந்த நிலையில் தூங்குவதாலும் எச்சில் வழியக்கூடும்.

8. நரம்பியல் பிரச்னைகள் – தூக்கத்தில் எச்சில் வடிப்பதற்கான முக்கியக் காரணங்களில் நரம்பியல் கோளாறுகளும் ஒன்று.

பக்கவாதம், கட்டிகள், பெருமூளை வாதம் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் அதிகமான எச்சில் வடிய வாய்ப்பு உள்ளது.

☆ பிரச்னைக்குத் தீர்வு:

தூங்கும்போது முதுகைத் தரையில் வைத்து நேராகப் படுத்து உறங்க கற்றுக்கொள்ள வேண்டும். நேராகத் தூங்கும்போது உடல் இயற்கையாகவே எச்சிலைச் சுலபமாக விழுங்கிவிடும்.

தூக்கத்தில் எச்சில் வடிப்பவர்கள் ஒருபுறமாகச் சாய்ந்து தூங்காமல், நேராகப் படுத்துத் தூங்கப் பழகிக்கொள்வது நல்லது. தூக்கத்தின்போது வாயை மூடிய நிலையில் வைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here