சண்டக்கோழி 2 விமர்சனம்
Sandakozhi 2

சண்டக்கோழி 2 விமர்சனம் : – சில வருடங்களுக்கு முன் வெளிவந்த, “சண்ட கோழி” படத்தின் இரண்டாம் பாகமாக விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜாய், கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த், மாரிமுத்து, பிறைசூடன், கு.ஞான சம்பந்தம்… உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையில், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரியுடன் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, உலகம் முழுமைக்கும் லைக்கா பட நிறுவனம் வெளியீடு செய்ய, வெளி வந்துள்ள படம் தான் “சண்டக்கோழி – 2.”

கதைப்படி, தேனி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்டபகுதியில் உள்ள எட்டு ஊர்களுக்கு பொதுவான வேட்டை கருப்பன் கோயில் திருவிழா, 7 வருடங்களாக தடைபட்டிருக்கிறது. மழையும், மண் வளமும் வேண்டி எப்படியாவது இந்த ஆண்டு அந்த திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று எட்டு ஊர்க்கும் பொதுத் தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.

ஏழுவருடங்கள் திருவிழாவை நடத்த விடாமல் பார்த்துக் கொண்டு, கூடவே தன் கணவரை தீர்த்து கட்டிய குடும்ப வாரிசை தீர்த்து கட்டி, தன் பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து தீர்த்து கட்ட த் திட்டமிடுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து விட்டு ஏழுவருடமாக ஊரில் இல்லாத ராஜ்கிரணின் வாரிசும் நாயகருமான விஷால், அந்த ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு பெண் போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் கண்டவுடன் காதல் பிறக்கிறது.

அத்தனை வருட பகை களைந்து திருவிழா நல்ல படியாக நடந்ததா? ஜானி ஹரியை கொன்று, வரலட்சுமி தன் குடும்ப பகையை தீர்த்தாரா? விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல் நிறைவேறியதா…? என்பதே படத்தின் “சண்டக்கோழி 2” கதை மொத்தமும்.

ஊர் பெரிய மனிதரான அப்பாவிற்கு உதவியாக, ஒரு குடும்பத்தின் கொலை பகை களைந்து, கோயில் திருவிழாவை நடத்தி வைக்கும் நாயகராக விஷால், தனது வழக்கமான பாணியில் படம் முழுக்க அதிரடியாக பவனி வருகிறார்.

ஏர்போர்ட்டில், தடபுடல் மேளதாள வரவேற்பு தரும் ஊர் மக்களைத் தவிர்த்து விட்டு “இது எங்க ஊரு வெயிலு, எங்க ஊரு புழுதி… எம்மேல பட்டா தான் திருப்தி” என வாடகை காரில் ஏறி அமர்ந்து ஏசி வேண்டாம் என ஜன்னலைத் திறந்து விட சொல்லி, ஊரை ரசித்தபடி, வரும் விஷாலை பாராட்டும் கார் டிரைவரிடம், “அவங்க வாசிக்கறதுப் பிடிக்காம தான் உங்க வண்டியில ஏறி வந்தேன்….” என அசரடிப்பதில் ஆரம்பித்து, “அருவாக்கு தெக்கு எது? வடக்கு எது? தெரியாது காத்து போற போக்குல போய் எதிர்ல யார் நின்னாலும், எது பட்டாலும் வெட்டித்தள்ளும்…. அத சின்ன பையன் கையில கொடுத்து வன்மத்தை வளர்க்கிறியே… வெறும் சாமி, கோயில் திருவிழாக்களால மட்டும் முடியாது, “எப்போ பழசு எல்லாம் மறந்து உன் கண்ணில் இருந்து கண்ணீர் துளி எட்டிப்பார்க்குதோ அப்பதான் மண்ணலு மழைய பாரக்கலாம்” என கொலை வெறியோடு இருக்கும் வரலட்சுமியிடம் க்ளைமாக்ஸில் மன்றாடுவது வரை, விஷால், ரசிகர்களை பெரிதும் கவர்கிறார்.

Sandakozhi 2
Sandakozhi 2

அதே போன்று, ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். விஷால்-கீர்த்தியின் காதல் காட்சிகளும் ரசனை.

கீர்த்தி சுரேஷ், கதாநாயகி என்பதையும் தாண்டி, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்.

“யோவ் என்னய்யா நடக்குது இங்க…” என அசால்ட்டாக கேட்டபடி விஷாலிடம் குறும்புத்தனமான காட்சிகளில் ஈடுபடுவதிலகட்டும், விஷாலை, ராஜ்கிரணின் டிரைவர்… என நினைத்து வெகுளித்தனமாக பழகுவதிலாகட்டும், அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து மிரட்டியிருக்கிறார்.

அதிலும், “எனக்கு எப்பம்மா முடி எடுப்பீங்க…” எனக் கேட்கும் தன் பிஞ்சு குழந்தையிடம், ஜானி விஜய்யைக் காட்டி, “இவன் தலையை எடுத்ததும்….” என நஞ்சு விதைப்பதில் தொடங்கி,

விஷாலிடம் க்ளைமாக்ஸில், “இத்தனை ஆம்பளைங்க செய்வாங்கன்னு நின்னு வேடிக்கைப் பார்த்தது என் தப்புதான் நானும் சிங்கம் தான், பெண் சிங்கம், பொம்பளைக வீசினாலும் எஙக வீட்டு அருவா வெட்டும்..” என்றபடி விஷால் மீது அருவாளுடன் பாய்வது வரை… பிரித்து மேய்ந்திருக்கிறார்.

விஷாலின் வீர மிகு அப்பாவாக படத்தின் ஓட்டத்திற்கு, பெரும் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். கறி விருந்து சாப்பிடுவதில் தொடங்கி, ஊருக்காக உழைப்பது வரை அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம்.

காமெடியன்ஸ் கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த், காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்ற பிற நட்சத்திரங்களில், அர்ஜய், மாரிமுத்து, பிறைசூடன், கு.ஞான சம்பந்தம், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்..

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமே என்பது ஆறுதல். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பலே, பலே!

லிங்குசாமியின் இயக்கத்தில், வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் பாகம் – 2 இப்படமென்பது.. பெரிய பலம்! அதே மாதிரி படத்தில் ஆக்ஷன், டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் காட்சிப்படுத்தபபட்டிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்கு புதுசாக இருப்பது இப்படத்திற்கு கூடுதல்பலம்.

சண்டக்கோழி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த இரண்டாவது பாகத்தையும் குடும்ப பகை, ஊர்பகை, உறவு பகை, பழிவாங்கல்.. கதையாக உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி.

இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன்.. என அனைத்தையும் தனது பாணியில் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார்… வாவ்!

YouTube video

REVIEW OVERVIEW
ஆக மொத்தத்தில் "சண்டக்கோழி 2' -'சபாஷ் - 2 (விஷால் & லிங்குசாமி) !"
sandakozhi-2-review-2சண்டக்கோழி 2 விமர்சனம் : - சில வருடங்களுக்கு முன் வெளிவந்த, "சண்ட கோழி" படத்தின் இரண்டாம் பாகமாக விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜாய், கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த், மாரிமுத்து, பிறைசூடன், கு.ஞான சம்பந்தம்... உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையில், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரியுடன் பென் ஸ்டுடியோஸ் இணைந்து...