கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி. ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஓர் இழிவான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ஆதிதிராவிட மக்கள் கட்சி கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கும் போடப்பட்டது, இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்றும், பிரச்சார மேடைகளில் இப்படி பேசுவது வழக்கம் என்றும், ஆனால் இளைய சமுதாயத்திற்கு இந்த மாதிரியான பேச்சு நல்லதல்ல என்று தெரிவித்தார்.

மேலும் அவருக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கில் பட்டியல் இன மக்களை இழிவுபடுத்திப் பேசியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறி, இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்து, அர். எஸ். பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

திமுக சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான கட்சி என்று மார்தட்டிக் கொள்வது வழக்கம், ஆனால் கட்சியின் தலைவர்களின் செயல் முற்றிலும் எதிர்மறையானவை.ஈரோடு மாவட்டம் டி.என் பாளையத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த திமுக எம்.பி.அந்தியூர் செல்வராஜை மேடைக்கு கீழே அமர வைத்து இழிவுபடுத்தியது இதே திமுக. மற்ற மாவட்ட பிரச்சாரங்களில் பேசிய பொழுது கட்சி நிர்வாகியை மேடையிலேயே அமரும் படி செய்த திமுக தலைவர், ஈரோடு எம்.பி. அந்தியூர் செல்வராஜ், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரை மட்டும் கீழே அமர வைத்தது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இப்படி நடத்தப்படுகிறார் என்றால், மற்றவர்களின் நிலை என்னவென்று எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ஒன்றிணைவோம் வா பிரச்சாரத்தின் போது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தங்களை மூன்றாம் தரப்பு மக்களை நடத்துவது போல் இன்று நடத்தப்படுகிறோம். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? அல்லது அந்நியர்களா? என்று கேள்வியெழுப்பியது சர்ச்சையை உருவாக்கியது.

தயாநிதி மாறனின் இந்த செயலால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளையும் சம்பாதித்தது திமுக.இது போன்ற காரியங்கள் திமுக கட்சியில் நடந்துகொண்டு இருக்க, தருமபுரி மாவட்டத்தில் எம்.பி. கனிமொழி பங்குபெறும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பெண் ஒருவர் தான் ஒரு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் எனவும், அதனால் அநேக இடங்களில் தங்களை திமுகவினரே கட்சிக்குள் புறக்கணிக்கிறார்கள் எனவும் மனம் நொந்து கூறினார்.

இதை கேட்ட கனிமொழி அந்த பெண்மணியை ஆரத்தழுவி கட்டியணைத்து ஆறுதல் செய்வது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அந்தப் பெண்ணை சமாதானம் செய்வது போல நடித்தார்.திமுக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான கட்சி என்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் செல்லும் இடமெல்லாம் முழக்கமிட்டாலும், உண்மையில் அவர்கள் மீது திமுக அக்கறை கொள்ளவில்லை என்பது தான் அப்பழுக்கற்ற உண்மை. ஒரு பக்கம் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த திமுக எம்.பி. அந்தியூர் செல்வராஜுக்கு மேடையில் இடம் கொடுக்காமல், கீழே அமர வைக்கின்றனர்.

மறுபக்கம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.ஸ். பாரதி, பட்டியலின மக்களை பற்றி இப்படி இழிவு படுத்தும்படி பேசினால், எந்த அளவிற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது திமுகவிற்கு அக்கறை உண்டு என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அகம் ஒன்று பேசி, புறம் ஒன்று செய்தல் திமுகவின் வழக்கம்.சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக தக்கவைக்க வேண்டும் என்று எண்ணுகிற திமுக, குறைந்தபட்சம் அவர்களுக்காவது உண்மையாக உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.