நரிக்குறவர் குடும்பத்தை திரையரங்குக்குள் அனுமதிக்காதது குறித்து ரோகினி திரையரங்கம் அளித்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது.

சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றாக விளங்கி வரும் ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் தனது குழந்தைகளுடன் பத்து தல திரைப்படத்தை காண வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரோகினி திரையரங்கின் நிர்வாகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்திருந்தது வைரலாகி வருகிறது, அதில் அவர்கள், “பத்து தல படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படங்களை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் வந்திருந்தவர்களில் 2 வயது, 6 வயது, 8 மற்றும் 10 வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க எங்கள் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த ஆடியன்ஸ் ஒன்றுகூடி அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என குரல் எழுப்பி கொந்தளித்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கும் வகையில், அந்த குடும்பத்தினரை படம் பார்க்க அனுமதித்தோம்” என அந்த அறிக்கையில் ரோகிணி திரையரங்கத்தில் நிர்வாகம் குறிப்பிட்டதுடன் அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் தியேட்டரில் அமர்ந்து பத்து தல படம் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.