Rajiv Gandhi Assassination
Rajiv Gandhi Assassination

சென்னை: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்நிலையில் இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, இவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் மனுவை இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவு 161ன் கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 நபர்களும் முன் விடுதலை மனுக்களை ஆளுநர் மற்றும் அரசுக்கு முகவரி இட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு அவர்களையும் சேர்த்து விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஆளுநர் பன்வாரிலால் முடிவு தமிழக அமைச்சரவைக்கு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, முன்னதாக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளிலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அமைச்சரவை முடிவு ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.