சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். தொடர்ந்து, தனது 73-வது வயதிலும், அசராமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இத்தகைய பரபரப்பான சினிமா சூழ்நிலையில்,
ரஜினிகாந்த், இன்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், திடீர் என ஏற்பட்ட உடல் நல பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெளியான தகவலில், “இன்று காலை 6 மணி அளவில் ரஜினிகாந்துக்கு இருதய நோய் மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு, சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விஜய் ரெட்டி மற்றும் நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோரும் ரஜினிக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
ரஜினிகாந்துக்கு திடீர் என சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படவே, அடி வயிறு பகுதி வீங்கியதன் காரணமாகவே ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக, தற்போது அடிவயிற்றில் அவருக்கு ஸ்டன்ட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்டன்ட் பொருத்தப்பட்ட பிறகு, தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அறுவை சிகிச்சைக்கு பின்னர், சில மணி நேரங்கள் ICU-வில் இருந்த ரஜினிகாந்த் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடும்பத்தினர் கூட முழுமையான பாதுகாப்பு கவசம் அணிந்து தான் ரஜினிகாந்தை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களாம்.
ஏற்கனவே, ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், மிக விரைவாகவே அவருக்கு தொற்று ஏற்படும் என்கிற காரணத்தால் மருத்துவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்படுவதாக கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ;ரஜினிகாந்த்.. வழக்கம்போல உடல்நிலை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்’ குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இரண்டு மூன்று நாட்கள் ரஜினிகாந்த் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ரஜினிகாந்த் இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர், முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர் 4 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆக, நான்கு நாட்கள் ஆகும் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டாலும், இதுவரை மருத்துவர்கள் இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘திரும்ப வந்திட்டேன்னு சொல்லு…’ ‘சும்மா அதிருதுல்ல..’ என்ற எனர்ஜி வாய்ஸை வேறு ஸ்டைலில் ரஜினி சாரிடம் நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.! சீக்கிரம் வாங்க சார்..