rain continue for 5 days
rain continue for 5 days

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்: “மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது . கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தான், தற்போது தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போன நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னையை பொறுத்தவரை இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை மழை சற்று குறையும்” எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறுதினம் முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுவை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கனமழை பெய்த போதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தாலும், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததாலும், போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளானது.