விக்ரம் படம் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்,சூர்யா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

தமிழில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படம் கடந்த ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியிட்ட பின்பும் இப்படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ள. இந்நிலையில் மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணியுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு படத்திற்கான கதையை எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் நண்பர் மற்றும் விக்ரம் படத்தின் திரைகதையை எழுதியவருமான ரத்தினகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இக்கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.