public exam for 5th and 8th tamil nadu
public exam for 5th and 8th tamil nadu

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் தரத்தை உயர்த்தவே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, ‘பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும், அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது.

விஜயதசமியின் போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம். பெற்றோரோ, மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை., டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு சிரமம் இருக்கும் வகையில் தேர்வு இருக்காது. பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா(?) என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.