Polling Results in Puthiya Thalaimurai

அதிமுக 131 இடங்களில் அமோக வெற்றி பெறும் என புதிய தலைமுறையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன‌.

Polling Results in Puthiya Thalaimurai : சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 44% வாக்குகளை பெற்று, 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுயுகம் நடத்திய கருத்து கணிப்புகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை குழுமத்தின் நிறுவனமான புதுயுகம் டிவி கருத்து கணிப்புகளை நடத்தியது. இந்த கருத்து கணிப்புகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குசாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் அதிமுகவிற்கு பக்க பலமாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5% வாக்குகளை பெறும் என்றும் திமுக 38.5% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணி 39% வாக்குகளை பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45% வாக்குகள் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும் என்றும் திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்று புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம் திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர். இது அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதோடு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்பதை காட்டுகிறது.

தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.