Palanisamy replies to Stalin's question!
Palanisamy replies to Stalin's question!

சென்னை: குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மரணம் தமிழகத்தை நிலை குலைய வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் 4 நாட்களாக நடந்தும், குழந்தையை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் சுஜித் மரணம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘குழந்தை சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது.. மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர்.குழந்தை சுஜித் விஷயத்தில் நான் கோபம் அடைவதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார், அதில் உண்மை இல்லை..

மேலும் ராணுவ வீரர்களை மீட்பு பணிக்கு அழைக்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை. பயிற்சி பெற்ற துணை ராணுவப்படை வீரர்கள் பேரிடர் மீட்பு படையில் இருக்கிறார்கள். ராணுவத்திற்கு துப்பாக்கி வைத்து சுடத்தான் தெரியும், போர்வெல் பற்றி தெரியாது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான். ஸ்டாலின் இவ்வாறு அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்படுவது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

அதை அடுத்து, திமுக ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் மீட்கவில்லை(?) என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறுவது முறையல்ல, அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.