Nee Sudathaan Vanthiya

என் கனவு பலித்தது என டிக் டாக் புகழ் இலக்கியா நீ சுடத்தான் வந்தியா’ படவிழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Nee Sudathan Vanthiya Movie PressMeet : ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது,

” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன்.

பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன்.படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.

இந்தப் படத்தை 5டி கேமராவில்தான் ஆரம்பித்தோம். பிறகு ரெட் டிராகன், ஏரி அலெக்ஸா வரை கேமராக்கள் பயன்படுத்தினோம். அந்தளவுக்கு பட்ஜெட் பெரியதாகி விட்டது. இப்படத்தை எடிட்டிங்கும் செய்து இயக்கியிருக்கிறார் அண்ணன் துரைராஜ், அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.இந்தப் படம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது ” என்றார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ‘ டிக் டாக்’ புகழ் இலக்கியா பேசும்போது,

” இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன் .நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது .அனைவரும்இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் “என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது,

” நீ சுடத்தான் வந்தியா?’ தலைப்பு யாரை சுட வந்தாய்? என்று கேட்பது போல் இருக்கிறது. நான் யாரையும் சுட வரவில்லை. நான் வாழ்த்தத்தான் வந்தேன். இன்றைய காலகட்டத்தில் சினிமா எடுப்பது சிரமம். அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் எடுப்பது மிகவும் சிரமம் .எடுப்பதை விட அதை வெளியிடுவது மிகமிக சிரமமான காரியம். ஒரு படத்தின் ஆரம்பமான முதல் நாள் படப்பிடிப்பின்போது கிளைமாக்ஸ் எப்படி எடுப்பது என்று சிந்திப்பது போல் படம் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்படி வெளியிடுவது என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வெளியிடுவது இன்று சிரமமாக இருக்கிறது.நினைக்கிற பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை. தயாரிப்புச் செலவும் மிகவும் உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் எம்ஜிஆர் படங்களுக்கு சிவாஜி நடிக்கும் பெரிய படங்களுக்கு என் எஸ்.சி என்கிற செங்கற்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு என்ற இந்த மூன்று ஏரியாவும் சேர்ந்து 2 லட்சம் வியாபாரம் ஆகும். அனைவருக்கும் லாபம் கிடைக்கும் .இப்போது விஜய் நடிக்கும் படத்திற்கு செங்கல்பட்டு ஏரியா மட்டுமே 12 கோடி 18 கோடி என்கிறார்கள். தயாரிப்புச் செலவு அந்தளவுக்கு கூடி விட்டது சிறு படத்தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் . அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் “என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளை பாடலில் பார்த்தோம்.கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும் .ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் நன்றாக ஓடியது .அது மாதிரி சில படங்களும் ஓடின். அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான், பயந்தேன்,மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூட போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது.அதேபோல் இந்த படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன .நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்திருப்பார்கள் .அனைத்து காட்சிகளும் ஒளிப்பதிவாளர்தான் பார்த்திருப்பார்.இந்தப் படம் ஓடிவிடும் கவலை வேண்டாம்.சினிமாவுக்கு இஷ்டப்பட்டு வந்தால் வெற்றி பெறலாம். தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வரவேண்டாம் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டால் வெற்றி உறுதி. சினிமாவில் எப்படிப்பட்ட பாடல் காட்சிகள் எடுத்தாலும் எடுங்கள். ஆனால் சாராயத்தின் பெருமை பேசும் பாடல்கள் எழுத வேண்டாம் ;அப்படிப்பட்ட காட்சிகள் வைக்க வேண்டாம். ஏனென்றால் இன்று தமிழ் நாடு கெட்டுப் போய் இருக்கிறது. 85% பேர் குடித்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள். எனவே குடிக்கிற மாதிரி காட்சிகள் தேவையில்லை எனக்கு 68 வயதாகிறது . எவ்வளவு திடமாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வயதில் இவ்வளவு உடல் நலத்துடன் இருக்கிறேன். ஆனால் இன்று 20 வயது இளைஞனுக்குக் கூட கை நடுங்குகிறது கேட்டால் குடிக்குப் பழகிக்கொண்டு விட்டேன். விட முடியவில்லை என்கிறான்.அந்த அளவுக்கு குடித்துக் குட்டிச்சுவராக்கி இருக்கிறான்.முன்பெல்லாம் ஊருக்கு ஒரு குடிகாரன் இருப்பான். எங்கள் ஊர் தூத்துக்குடிப் பக்கம் கிராமம். அங்கு ஒரு குடிகாரனைப் பார்த்தால் எல்லாரும் பயந்து விலகி ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால இன்று நிலைமை எப்படி ஆகிவிட்டது பாருங்கள்? தமிழர்கள் நாம் வாழும் நாட்டையும் மண்ணையும் என்றும் விட்டுக் கொடுக்க கூடாது. இன்று தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் இந்திக்காரர்கள் ஒரு கோடியே 70 லட்சம் பேர் ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு ஓட்டுக்கு நுழைபவன் நாளை வீட்டுக்கும் வருவான்.நமக்கு குடியிருக்க வீடு வேண்டுமா வேண்டாமா ?இப்படியே விட்டால் நாளைக்கு நாம் இருக்க வீடு இருக்காது.அடுத்த தலைமுறைக்கு தமிழனுக்கு வாழ இடமிருக்காது.இந்திக்காரன் ஆதிக்கம் இப்படி அதிகரித்து வருகிறது. ஓட்டுக்கு வருபவன் இப்படியே போனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே ஆக்கிரமித்து விடுவான். நாளைக்கு வீடு கட்ட இடம் இருக்காது.எங்களது ஸ்டண்ட் மேன் யூனியன் இடத்தை விலைக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உரிய விலையை விடக் கூடுதலாக 10 கோடி தருகிறேன் என்று கேட்கிறான்.ஏனென்றால் இந்தப் பகுதி முழுக்க எல்லாமே அவன் இடங்கள் ஆகிவிட்டது. எங்கள் இடம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது.நாங்கள் கொடுக்கவில்லை.அது மட்டுமல்ல நம் தமிழ் நாட்டில் பல குற்றச் செயல்கள் செய்வதும் அவர்கள்தான். இந்திக்காரன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்றுபல குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான்.கொத்தனார் வேலை செய்பவர்கள் போல் சாதாரணமாகப் படுத்து தூங்கிக் கொண்டிருப்பான். யாராவது பெண்ணைக் கடத்திக்கொண்டு போய் விடுவான். இப்படி ஏராளம் செய்து கொண்டிருக்கிறான். நாம் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டைத் திறந்து போட்டுக்கொண்டு தூங்கக் கூடாது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்த பட விழா நடக்கிறது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை.வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம் தான். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார். நாம் விதவிதமான உடைகள்,உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்தற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுது போக்கிற்காகத் தான். அது காதலைச் சொல்லலாம்,நகைச்சுவையைச் சொல்லலாம் ,அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்த படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது.என்று திரையரங்கில் வர வேண்டிய படம் ஓடிடியில் வெளியானதோ அன்றே சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் என்றாகிவிட்டது.

இவர் சினிமா தெரியாமல் படமெடுக்க வந்தாலும் இப்போது அனுபவத்தில் கற்றுக் கொண்டு இருப்பார். ஆனால் இன்றைக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் 90 சதவீதம் பேர் சினிமா எடுக்க வருகிறார்கள்.அவர்களுக்குச் சினிமா தெரியாது. அப் படிப்பட்டவர்கள் தான் இன்று படம் எடுக்கிறார்கள். சினிமா பொழுதுபோக்காக இருக்க வேண்டும். அரசியலில் பொறுப்புடன் இருக்க வேண்டும். இன்று பொழுதுபோக்கு நிறைந்த சினிமாவில் பொறுப்பு வந்துவிட்டது. இன்று அரசியல் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. ஆனால் நாம் பொறுப்பாக இருப்போம். இந்த ஏப்ரல் 6 -ல் தேர்தல் வருகிறது. எனவே நாம் பொறுப்பாக இருந்து நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழ் நாட்டைக் காப்பாற்றுவோம்”என்றார்.

நிகழ்ச்சியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத்தலைவர் பி.வி கதிரவன் பேசும்போது,

“சினிமா என்பது ஒரு அற்புதமான சாதனம். தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கூட சினிமா ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. சக்தி வாய்ந்த அந்த சாதனத்தில் எந்த செய்தியையும் எளிதாகச் சொல்லிவிட முடியும். நான் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.என் கல்லூரிக் காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய ‘புன்னகை’ படத்தை பார்த்தேன். கருத்துள்ள அந்தக் கதை இன்னும் நினைவில் இருக்கிறது .படத்தில் நல்ல கருத்தை வைத்துக்கொண்டு செலவில்லாமல் எடுத்திருப்பார். இப்படியெல்லாம் சினிமாவில் தான் உருவாக்க முடியும்.இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் தம்பி அருண்குமாருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் “என்றார். விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.