NedunalVadai Success Meet

செல்வக்கண்ணன் இயக்கத்தில் பூராம், இளங்கோ, மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நெடுநல்வாடை படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார்.

இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா? கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு.

தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது?

இந்தப் படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன்.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். நுட்பமான விசயங்கள் நெடுநல்வாடை படத்தில் இருக்கும். கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் ஒரு தாய் கிணற்றை எட்டிப் பார்க்கும் காட்சியில் என் மனம் துடித்து விட்டது.

இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு.

மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.

அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான்.

படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உனக்குப் பாராட்டு தம்பி. ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் பொக்கிஷம்.

எஸ்கேப்.ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி. தமிழ் திரைப்பட பாடல்கள் சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்து விட்டது. 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள்.

அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்” என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.