Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் …
ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது…
முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சமுத்திரகனியுடன் பணியாற்றியதும் நல்ல அனுபவம். ஜிப்ரானின் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
எடிட்டர் நெல்சன் ஆண்டனி பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அண்ணன் சசிகுமார் படங்களை ரசிகனாக பார்த்திருக்கிறேன் அவரது படத்தை ரஷ்ஷாக பார்த்து, எடிட் பண்ணியது புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநருக்கு தான் நன்றி. பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள் இங்கு இவர்களுடன் இருப்பதற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
கலை இயக்குநர் உதயகுமார் பேசியதாவது…
இந்தப் படத்தில் என்னை பரிந்துரை செய்த இணை இயக்குநர் குரு அவர்களுக்கு நன்றி. அண்ணன் சசிகுமார் அவர்களுடன், நான் மூன்று வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் வினோத் அவர்களின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நான் அசிஸ்டெண்டாக பணியாற்றினேன். அவர் இருக்கும் மேடையில் கலை இயக்குநராக நான் இருப்பது, எனக்கு பெருமை. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் நிலா சுதாகர் பேசியதாவது…
இத்திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சரவணன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக. இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள், மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். வாழ்வியலைச் சொல்லும் படமாக, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சரவணன் மற்றும் சசிகுமார் அவர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மகிழ்ச்சி. படத்தில் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது, உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
Think Music சந்தோஷ் பேசியதாவது…
இந்த மேடை ரொம்ப ஸ்பெஷல். இரா. சரவணன் மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார், நீங்கள் பாருங்கள் என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் பிக்ஸ் செய்யாமல் இருந்தது, எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூட செய்யாமல், அந்த படத்தை பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் இப்படி எல்லாம் ஊர் பக்கம் நடக்கிறதா? என்று கேட்டேன். ஆம் ஊர் பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம் என்றார்கள். படத்திற்கு இசை பற்றி பேச்சு வந்தது, எனக்கு ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. சரவணனும் அவர் கண்டிப்பாக சரியாக இருப்பார் என்றார். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளை.. காட்சிகளை.. இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் பேசியதாவது…
ஒரு சினிமா நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கும் என்பதை, மீண்டும் மீண்டும் ஒரு நல்ல சினிமா சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்க எல்லாம் சென்னையிலேயே பிறந்து எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம், ஆனால் கிராமத்து பக்கம், இன்னும் இது மாதிரி சம்பவங்கள், தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஒரு படமாக உங்கள் முன்னால் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இரா. சரவணன் போன்ற இயக்குனர்கள் இருப்பது மகிழ்ச்சி. இயக்குனர் இரா சரவணனின் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களுக்கு நான் ரசிகன். விஷுவலாகவும் திரைப்படத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மாற்றத்தை பேசும் மாமன்னர்கள் இருக்கும் சமூகத்தில் அதை அடிமட்டத்தில் இருந்து சமத்துவத்தை பேசும் நந்தனார்களும் நமக்குத் தேவை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசியதாவது…
இயக்குநர் இரா. சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், நாம் நிறைய பேரோடு பழகுவோம், ஆனால் சிலருடன் மட்டும்தான் நெருக்கமாக இருப்போம், அந்த வகையில் இரா. சரவணன் மிக அற்புதமான நண்பர், அவரோடு நிறைய சினிமா பற்றி பேசுவேன். ‘உடன்பிறப்பே’ படத்திற்கு பிறகு, அவர் பெரிய இடத்தை அடைவார் என வாழ்த்தினேன். இப்போது ‘நந்தன்’ படத்திற்கு பிறகு, அவருக்கு அந்த இடம் கிடைக்கும். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி, இந்த படத்தை அவர் செய்துள்ளார். நடிகர்கள், தயாரிப்பு குழுவினர், படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது…
படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும், படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தை தொடங்கினார், அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார்.
இந்த கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், ‘சோப்புலிங்கம்’ கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார், நான் தயங்கினேன். முதன்முதலில் சமுத்திரகனி தான் என்னை நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை, நான் ஒரு இயக்குனர் தான், நன்றாக நடித்தேன் என அவர்கள் சொன்னால் மகிழ்ச்சி. இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது.
சரவணன் தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்த திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். ’16 வயதினிலே’ படத்திற்கு பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்த திரைப்படத்திற்காக தந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை, உண்மையாகவே மிக அற்புதமான திரைப்படம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.