Nalini strike in Vellore jail
Nalini strike in Vellore jail

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி 8 -ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடகோரி நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினியும் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆண்கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் என அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்த முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறி அவரது மனைவி நளினி கடந்த 26- ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றோடு 8-வது நாளாக நளினி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

முன்னதாக தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி நளினியின் கணவர் முருகனும் நேற்று 15- வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவங்களை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத்துறை அதிகாரிகள் நளினியை வலியுறுத்தினர்.

இருப்பினும் ‘நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறி சமாதானம் செய்யும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.