Nalini Sriharan goes on hunger strike demanding release
Nalini Sriharan goes on hunger strike demanding release

வேலூர்: வேலூர் சிறையில் தொடர்ந்து 10- வது நாளாக நளினியும், 17-வது நாளாக முருகனும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினி மற்றும் முருகனின் உடல்நிலை நலிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 18 – ஆம் தேதி வேலூர் சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்து முருகனை தனிச்சிறையில் அடைத்தனர்.

அதன் காரணமாக முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முருகன் இன்று 17-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவரை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும், அவரது உயிரை காப்பாற்றவேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் என் கணவருக்கு சிறையில் ஏற்படக்கூடிய கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், அவருக்கு வழக்கம் போல அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நளினி இன்று 10-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நளினி 10 நாட்களும், முருகன் தொடர்ந்து 18 நாட்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருவரின் உடலில் நீர்சத்து குறைந்து இவர்களின் உடல்நிலை தற்போது மோசமைடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முருகன் மற்றும் நளினிக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.