Mumbai Indians
Mumbai Indians

Mumbai Indians : ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

முதலில் பொறுமையாக ஆடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக, கெயில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் அரை சதமடித்து அசத்தினார்.

லோகேஷ் ராகுல் கெயிலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் 11 வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது.

சிறப்பாக ஆடிய கெயில் 36 பந்துகளில் 7 சிச்கர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

போட்டியின் தொடக்கம் முதல் நின்ற லோகேஷ் ராகுல் 63 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

பின்னர் 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் சித்தேஷ் லாட் 15 ரன்னிலும், குயின்டான் டி காக் 24 ரன்னிலும் வெளியேறினர்.

சூர்யகுமார் யாதவ் (21 ரன்), இஷான் கிஷன் (7 ரன்), ஹர்திக் பாண்ட்யா (19 ரன்), குருணல் பாண்ட்யா (1 ரன்) உள்ளிட்டோரும் தாக்குப்பிடிக்கவில்லை.

இன்னொரு பக்கம் பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் சிக்சர் மழை பொழிய ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது.

இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் வீசினார். அவர் நோ-பாலாக வீசிய முதல் பந்தை பொல்லார்ட் சிக்சராக்கினார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

2-வது பந்தில் பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த 3 பந்துகளில் ராஜ்பூத் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஏற்கனவே மொகாலியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் அடைந்த தோல்விக்கும் இதன் மூலம் பழிதீர்த்துக் கொண்டது. 7-வது லீக்கில் ஆடிய பஞ்சாப்புக்கு இது 3-வது தோல்வியாகும்.