Mumbai Indians
Mumbai Indians

Mumbai Indians :

51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரி துரத்தியடித்த ரோகித் சர்மா அடுத்த 3 ஓவர்களில் தடுமாறினார். அவர் 24 ரன்களில் (18 பந்து) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் குயின்டான் டி காக் நிலைத்து நின்று விளையாட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

சுழலில் மிரட்டிய ரஷித்கானும், முகமது நபியும் மும்பை அணியின் ரன்வேகத்துக்கு தடையாக இருந்தனர்.

சூர்யகுமார் யாதவ் 23 ரன்னிலும், இவின் லீவிஸ் ஒரு ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்னிலும், பொல்லார்ட் 10 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே டி காக் அரைசதத்தை கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. குயின்டான் டி காக் 69 ரன்களுடனும் (58 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குருணல் பாண்ட்யா 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா (25 ரன்), கப்தில் (15 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்தாலும் மிடில் வரிசையில் திணறினார்கள்.

கேப்டன் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (12 ரன்), அபிஷேக் ஷர்மா (2 ரன்) சோபிக்க தவறினர்.

இதற்கு மத்தியில் 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அவர் முதல் 2 பந்தில் 2 ரன் விட்டுக்கொடுத்தார்.

3-வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட முகமது நபி (31 ரன்) அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் 5-வது பந்தில் மனிஷ் பாண்டே 2 ரன் எடுக்க, கடைசி பந்தில் 7 ரன் தேவையாக இருந்தது.

இந்த பந்தை மனிஷ் பாண்டே சிக்சராக்கி ஆட்டத்தை சமனுக்கு (டை) கொண்டு வந்தார். ஐதராபாத் அணியின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்களில் நின்றது. மனிஷ் பாண்டே 71 ரன்களுடன் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

ஆட்டம் சமன் ஆனதால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஐதராபாத் பேட் செய்தது. பும்ரா பவுலிங் செய்தார். இதில் 4 பந்தில் 2 விக்கெட்டையும் பறிகொடுத்த ஐதராபாத் 8 ரன் எடுத்தது.

தொடர்ந்து 9 ரன் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. ஐதராபாத் தரப்பில் சூப்பர் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார்.

முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பொல்லார்ட் 2 ரன் எடுத்து மும்பையின் வெற்றியை உறுதி செய்தார்.

8-வது வெற்றியை பெற்ற மும்பை அணி 3-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

அதே சமயம் 7-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி கடைசி லீக்கில் பெங்களூரை வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.