Monitor the use of plastics in election campaigns
Monitor the use of plastics in election campaigns

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவ்வாறு அவர் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கொடிகள், பேனர்கள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன என்றும், தேர்தல் முடிந்த பிறகு அவை கழுவுகளாக குவிந்து விடுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என்றும் குற்றம் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு தெரிவிக்கையில், “தேர்தல் பிரசாரத்தின்போது, பேனர், விளம்பர பலகை போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷனும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் நிலைப்பாடாக எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

ஆகவே, இந்த உத்தரவு இச்சமயம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தேர்தல் கமிஷனும், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.