
MLA Dusi K Mohan – ஆரணி: “ஆரணியில் நடந்த விழாவிற்கு தன்னை அழைக்காததை தட்டிக்கேட்ட கட்சி நிர்வாகியை, அதிமுக எம்எல்ஏ கன்னத்தில் ஓங்கி அறைந்தார்”.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அமைச்சர் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், செய்யாறு எம்எல்ஏவுமாக இருப்பவர் தூசி கே.மோகன்.
ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட பொருளாளர்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், கட்சி சார்ந்த கூட்டங்கள், விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு என எந்தவொரு நிகழ்ச்சிக்கும் நித்யானந்தம் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பினர் இடையே முன்பிருந்தே பனிப்போர் நிலவி வந்ததுள்ளது.
இந்நிலையில், ஆரணி நகராட்சியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கட்டிடத் திறப்பு விழா நடந்தது. விழா நடைபெறுவது குறித்து தகவலறிந்த எம்ஜிஆர் மன்ற மாவட்ட பொருளாளர் நித்யானந்தம், தனது ஆதரவாளர்களுடன் வந்தனர்.
அங்கு தூசி கே.மோகனை சந்தித்து, விழாவிற்கு தன்னையும், கட்சி நிர்வாகிகளையும் ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு, பையூர் பகுதியில் நடந்த அதிமுக 47வது ஆண்டு துவக்கவிழாவுக்கும் எங்களை அழைக்கவில்லை என்றும், தொடர்ந்து நீங்கள் தன்னையும் எங்களது ஆதரவாளர்களையும் அவமதித்து வருகிறீர்கள் என ஆவேசமாக பேசி உள்ளார்.
இதனால் எம்எல்ஏ தூசி கே.மோகனுக்கும், நித்யானந்தத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், இந்த வாக்குவாதத்தில், இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த எம்எல்ஏ தூசி கே.மோகன், நித்யானந்தத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அமைச்சர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அங்கிருந்த நிர்வாகிகளிடம், நித்யானந்தத்தை வெளியே அழைத்து செல்லும்படி கூறினார்.
அதன்பேரில், கட்சியினர் அவரை வெளியே கொண்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் திட்டமிட்டப்படி கட்டிடத் திறப்பு விழா நடந்தது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் மற்றும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.