Marina Protest
Marina Protest

Marina Protest – சென்னை: “சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி தர முடியாது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு,

மெரினாவில் 90 நாள் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அஜய் ரத்தோகி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் குவிந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளை நடத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் போராட்டம் நடத்த அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, அதையும் மீறி போராடுபவர்களைக் கைது செய்தனர், மேலும் மெரினா கடற்கரையே காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், போராட்டம் நடத்த அனுமதி தர முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.