மாவீரன் திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருப்பதால் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு குறித்து சில தகவல்கள் வேகமாக இணையத்தில் பரவி வந்தது. அதாவது, படப்பிடிப்பு தாமதம் ஆவது பற்றி சில விஷயங்கள், சினிமா ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுகளாக பேசப்பட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது . இதனால் இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்த அறிக்கையில், “மாவீரன் படம் குறித்து ஆதாரமற்ற வதந்திகளும், பொய்யான செய்திகளும் தொடர்ந்து பரவி கொண்டே இருக்கிறது. அவற்றை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மறக்கமுடியாத ஒரு படத்தை தர மாவீரன் படக்குழு தொடர்ந்து உழைத்து வருகிறது” என தெரிவித்துள்ளது. மேலும் “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என திருக்குறளை எடுத்துக்காட்டாக காட்டி, “வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களை சொல்லுதல் ஆகும்” என்ற விளக்கத்தையும் குறிப்பிட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.