Local election dates announced
Local election dates announced

சென்னை: வரும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 2 கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சரியாக 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் காலம் தாழ்த்தப்பட்டு தற்போது உள்ளாட்சி தேர்தல் ஒருவழியாக நடக்கவுள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது., ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது குறிப்பிடதக்கது. அதையடுத்து, தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடக்கவிடாமல் பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்னும் மூன்று வாரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.

மேலும் வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும் எனவும், வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 13 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும்.

இரண்டாவது கட்டமாக, டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும்

இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் 1,18,974 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.