‘சவால்களை’ ஒரு நடிகர் எப்போது விரும்புகிறாரோ, அப்போதிலிருந்து அவர் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்.அப்படி தமிழ் சினிமாவில் சொல்லக் கூடிய ஒரு ஹீரோ தான் ஜெயம் ரவி.
சமகாலத்திய ஹீரோக்கள் செய்யத் தயங்கும் பல பரிசோதனை முயற்சிகளை தன் படங்களில் அனாயாசமாக செய்து காட்டுபவர் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் அவரை முன்னோக்கி கொண்டு செல்கிறது.
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ படத்தில் பாராட்டுக்களையும், தனி ஒருவன் 2 பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகும் ‘அடங்க மறு’ படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் ஜெயம் ரவி,
தமிழ் சினிமாவில் ஆச்சர்ய நாயகனாக எப்போதுமே இருக்கிறார். இந்த வரிசையில் அவர் நடிக்கும் அடுத்த படமும் இதுவரை பார்க்காத வித்தியாசமான படமாக நிச்சயம் இருக்கும்.
 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 20-ந்தேதி காலை பூஜையுடன் தொடங்கியது.
 
ஒரு சிறந்த படக்குழுவுடன் இணைந்தது பற்றி தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும்.
இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும்  பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சென்னையில் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம்” என்றார்.
 
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.