Jayalalitha Memorial
Jayalalitha Memorial

Jayalalitha Memorial – சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கில் மார்ச் மாதம் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு நினைவிடம் கட்ட கூடாது என தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், சிறைத் தண்டனை பெற்ற அவருக்கு ரூ.50 கோடி செலவில் மெரினாவில் நினைவிடம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.

இதனால், தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு பணத்தில் நினைவிடம் அமைக்கக் கூடாது. மேலும் அவ்வாறு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

மேலும், மக்களின் வரிப் பணத்தை, முதன்மையான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது” இவ்வாறு கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்நிலையில், சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் ஜெயலலிதா -க்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்ச் மாதம் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.