நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது நடிக்க தயாராகி கொண்டிருக்கும் படம் தான் “ஜெய்லர்”. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிகை அலங்காரத்திற்கு அலிம் ஹக்கீம் என்ற பிரபல சிகை அலங்கார நிபுணர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கும் பல முன்னணி பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.